சென்னை:
இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றம் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கறாராக அறிவுறுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணி வதையும், கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிவதையும் கட்டாயமாக்கி விபத்துகளை தவிர்க்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின் போது, ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்திய நீதிமன்றம் தற்போது இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்காத காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
விசாரணையின்போது, சமீபத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் ஹெல்மெட் போடாமல் பயணித்த 2 காவலர்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பைக் பின்னால் ஹெல்மெட் அணியால் அமர்ந்து செல்வோர் மீது வழக்குப்பதிவு செய்யதாதது ஏன்? என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினர்.
ஹெல்மெட் உத்தரவு அமல், நடவடிக்கை எடுக்காத காவலர்கள் பற்றி ஜூலை 5-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை திருப்தி அளிக்காவிட்டால் நடவடிக்கைகள் கடுமையானதாக இருக்கும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.