மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் கவுதம் மேனன் குயின் என்கிற பெயரில் வெப் தொடராக எடுத்துள்ளார் .

இந்த தொடரை வெளியிட தடை கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால் குயின் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறே இல்லை என்று கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.அனிதா சிவகுமரன் எழுதிய குயின் புத்தகத்தை தழுவி தன் தொடர் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கவுதம்

இன்று குயின் வெப் தொடரின் முதல் எபிசோட் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே எம்.எக்ஸ். பிளேயரில் வெளியாகியுள்ளது. என்ன தான் இது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறே இல்லை என்று தெரிவித்தாலும் முதல் காட்சியிலேயே அது அப்பட்டமாக தெரிகிறது .

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது.

இந்த நேரத்தில் ஜெயலலிதா’வின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்கக்கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைபடத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்ததைப் போல குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மோடி வாழ்க்கை வரலாற்று படத்தை பொறுத்தவரை, அவர் தேர்தலில் போட்டியிட்டார்… ஆனால் இந்த வழக்கில் அப்படி அல்ல எனவும், 2017-ம் ஆண்டு வெளியான நாவலின் அடிப்படையில் இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளதாகவும், உண்மை சம்பவங்களை தழுவிய கற்பனை கதை எனவும் இணையதள தொடரின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.