சென்னை: 2009ம் ஆண்டுசிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ப.சிதம்பரத்தை எதிர்த்து, தோல்வியடைந்த  ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கில், 10 ஆண்டுகளுக்கு பிறகு  இன்று  ப.சிதம்பரம் வெற்றி செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றது. அப்போது, சிவகங்கை லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அதிமுக சார்பில்,  முன்னாள் மாநில அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார்.

இந்த தேர்தலில், 3,354 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், சிதம்பரம் வெற்றி பெற்றார். இதையடுத்து, சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ராஜகண்ணப்பன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சுமார் 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. இறுதியில் இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணாமுன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு ( 2020) அக்டோபரில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதி தள்ளி வைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.  தீர்ப்பில், ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என உத்தரவிட்டு, குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என ராஜகண்ணப்பன் மனுவை தள்ளுபடி செய்தார்.