சென்னை: பட்டியலின மக்களை விமர்சித்து பேசியதாக திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரித்த நீதிமன்றம், ஆர்.எஸ்.பாரதியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சிவகங்கையில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.பாரதி பட்டியலினத்தவர்களை சிறுமைப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி மீது புகார் பதியப்பட்டு வழக்கு தொடரப்ட்டது.
இதற்கு தடை விதிக்கக்கோரி ஆர்.எஸ்.பாரதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், அவரது மனு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், வழடக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ஆர்.எஸ்.பாரதியின் மொத்தப் பேச்சும் பட்டியலின மக்களுக்கும் நீதிபதிகளுக்கும் எதிராக உள்ளதாகவும், உயர் பதவிகளை வகிக்கப் பட்டியலின மக்களுக்குத் தகுதியில்லை என்ற பொருள்படும்படி பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறிய நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்தார். வழக்கை நாள்தோறும் விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.