சென்னை: எடப்பாடி அரசு அறிவித்துள்ள வன்னியர் இடஒதுக்கீடு வெறும் அறிவிப்புதான், அதை  திமுக தான் செயல்படுத்தும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக, அதிமுக தவிர மேலும் இரண்டு கூட்டணிகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிமுகவைப் பொறுத்தவரை இன்று காலை பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பாமகவுடன் தொகுதி பங்கீடு இன்று இறுதியாக வாய்ப்புள்ளது என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல, திமுகவுடன் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தொகுதி உடன்பாடு குறித்து பேசிய நிலையில், மீண்டும் பேசவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், உங்கள்தொகுதியில் ஸ்டாலின் நிகழ்சியின் வாயிலாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மக்களின் குறைகளைக் கேட்ட திமுக தலைவர் அங்கு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, சட்டமன்றத்தில் நேற்று முதல்வர்  அறிவித்த வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு, வெறும் அறிவிப்பாகவே உள்ளது. முதல்வர் பழனிசாமியால் அரசாணை கூட வெளியிட முடியாது. அந்த இடஒதுக்கீட்டை நாம்தான் செயல்படுத்தனும், திமுக ஆட்சிக்கு வந்ததும், அது நிறைவேற்றப்படும்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின்,  சென்னை அருகேயுள்ள நீர் நிலைகளையே தூர்வாரவில்லை. அப்படி இருக்கும் போது தமிழகம் முழுவதும் எப்படி தூர்வாரியிருப்பார்கள். 4 ஆண்டுகளில் அரசு கஜானாவைத்தான் அதிமுகவினர் தூர்வாரியுள்ளனர்” என்று காட்டமாக விமர்சித்தார்.