சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர்மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டதுடன், ஊழல் வழக்கு குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம், தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தரப்பில் வழக்குகள் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அவரது மனுவில , தன் மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும், தமிழகஅரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடர்ந்துள்ளது என கூறினார்.

இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்  பி.என்.பிரகாஷ், நீதிபதி டீக்காராமன்  அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  “ஒளிவு மறைவின்றி டெண்டர் கோரப்பட்டது. இதில் தனக்கு எந்த பங்கும் இல்லை” எனவும் முதற்கட்ட விசாரணைக்கு மட்டுமே அனுமதி கோரப்பட்டதாகவும், வழக்கு பதிய அனுமதி பெறவில்லை என்றும் வாதிடப்பட்டது.

தையடுத்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது மத்திய கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை வெளியானதாகவும், அதில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார். முதல் தகவல் அறிக்கை என்பது வழக்கின் ஆரம்பகட்டம் என்றும், ஆரம்பகட்டத்திலேயே வழக்கை ரத்து செய்யக்கோர முடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.

இந்த வழக்கில் மற்றொரு புகார்தாரரான அறப்போர் இயக்கம் தரப்பில் வாதங்களை முன்வைக்க ஏதுவாக விசாரணையை நவம்பர் மாதம் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழக்கு நவம்பர் 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ளதாக வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு என்றும், கோவையில் 47 டெண்டர்கள் அமைச்சரின் உறவினர்களுக்குச் சொந்தமான இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன என அறப்போர் இயக்கம் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முறையாக விசாரணை நடத்தாமல் எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போதுமான கால அவகாசம் இருந்த போதும் அவசரமாக ஏன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர்  தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், அவர்மீது ஊழல் வழக்கு தொடர்பாக விசாரண நடத்தலாம் என அனுமதி வழங்கி உள்ளது.