சென்னை: ஸ்டெர்லைட் திறக்க அனுமதியில்லை என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை, காவல்துறையினரின் காட்டு மிராண்டித் தனமான துப்பாக்கி சூட்டைத் தொடர்ந்து, ஆலையை தமிழக அரசு மூடி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பல கட்ட வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று உயர்நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட்ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை காரணமாக அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். பலர் ஏற்கனவே இறந்த நிலையில்,அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டமும் மாசுபட்டு, மக்கள் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதை எதிர்த்து, அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு மக்கள்  போராட்டம் தீவிரமடைந்தது.  இந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்தனர். அதுபோல,  தமிழக அரசு  ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையமும் அமைத்து விசாரித்து வருகிறது.

தூத்துக்குடி வன்முறை, உயிரிழப்பை  தொடர்ந்து,  ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம்   தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிட்டது. அதைத் தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம்,  ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ஆனால், தருண் அகர்வால் குழு, ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றது. அதன்பேரில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல், ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் உச்ச நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க இடைக்காலத் தடை விதித்தது. அத்துடன், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரியும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி முதல் சிறப்பு அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. 39 நாட்கள் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர், கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று சென்னை உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுத்துள்ளதுடன், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த தீர்ப்பை நீதிபதிகள், டிஎஸ் சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வு வழங்கி உள்ளது. தீர்ப்பையொட்டி, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் குவிந்திருந்தனர்.