சென்னை:
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த குட்கா ஊழல் விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
இந்த ஊழல் விசாரணையில் 2 முறை விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இவ்வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது புகார்கள் உள்ளதால் தமிழக அரசு கலக்கத்தில் உள்ளது.
தடையை மீறி தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்ய ரூ.40 கோடி வரை லஞ்சம் கை மாறியதாக கூறப்பட்டது.
இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணையின்போது, விசாரணை அதிகாரிகள் மாற்றப்படுவது குறித்தும், இந்த ஊழலில் அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 25ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, குட்கா முறைகேடு வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க தமிழக அரசு தயங்குவது ஏன்? என்றும், இந்த வழக்கில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணை அவசியம் என கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த விசாரணையின்போது, போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெ. வீட்டில், சசிகலா தங்கியிருந்த அறையில் இருந்து, குட்கா விவகாரம் குறித்து அப்போதைய டி.ஜி.பி ராஜேந்திரன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய ரகசியக் கடிதம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து இருந்தது.
இதற்கிடையில் குட்கா ஊழல் குறித்து விசாரித்து வந்த விசாரணை அதிகாரி மஞ்சு நாதாவை தமிழக அரசு மீண்டும் மாற்றியது. இதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குட்கா ஊழல் வழக்கு குறித்த விசாரணை சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்ற முதல் அமர்வு, குட்கா ஊழல் குறித்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர். இதன் காரணமாக தமிழக அரசு கலக்கத்தில் உள்ளது.