சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, தேர்தல் பணிகளில் ஈடுபடும் தனியார் வாகன ஓட்டிகளுக்கும் தபால் வாக்கு அளிப்பது குறித்து பரிசீலனை செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையொட்டி, கண்காணிப்பை பலப்படுத்த தேர்தல் ஆணையம் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 702 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதுடன், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் வீதம் 234 தொகுதிகளுக்கும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வீடியோ குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிக்காக 330 கம்பெனி துணை ராணுவம் அனுப்பப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, போதிய அரசு வாகனங்கள் இல்லாதபடியால், ஆயிரக்கணக்கான தனியார் வாகனங்கள் அமர்த்தப்பட்டுள்ளன. இந்த பணியில், ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களும் ஈடுபட்டு வருவதால், அதற்கு தபால் வாக்கு செலுத்த அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் செயலாளர் ஜூட் மேத்யூ சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகார் மனுவில், , சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் அதிகாரிகளை அழைத்துச் செல்லும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கெண்டு செல்லும் வாடகை வாகன ஓட்டுநர்களும், பால், குடிநீர், காய்கறிகள், பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டுநர்களும் தங்களது வாக்குகளை செலுத்த முடிவதில்லை. வாக்களிக்க தகுதியிருந்தும், பணி நிமித்தமாக 8 லட்சம் ஓட்டுநர்களால் வாக்களிக்க இயலவில்லை. நூறு சதவீத இலக்கை மையமாக கொண்டு செயல்படும் தேர்தல் ஆணையம், வாக்களிக்க இயலாதவர்களை அடையாளம் கண்டு அவர்களையும் வாக்களிக்க செய்வதற்கு எந்த நடைமுறையும் ஏற்படுத்தவில்லை. எங்களுக்கு தபால் வாக்கு வசதி கேட்டு அளித்த மனுவும் பரீசிலிக்கபடவில்லை. அதனால், ஜனநாயக கடமையை செய்வதற்கு எங்களுக்கு தபால் வாக்கு வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீது தலைமைநீதிபதி சஞ்சிப் பானர்ஜி , செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரணை நடத்தியது. அ‘‘தைத்தொடர்ந்து, தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து, வாகன ஓட்டிகளுக்கும் தபால் வாக்கு அளிப்பது குறித்து பரிசீலனை செய்யயும்படி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளது.