முரசொலி அறக்கட்டளை மீது 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி அளித்த புகாரின் நிலை குறித்து ஜூன் 13 ஆம் தேதிக்குள் வெளியிடுமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு (என்சிஎஸ்சி) சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தி.மு.க. நாளேடான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் என்ற சர்ச்சை எழுப்பப்பட்டதை அடுத்து பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் 2019 ம் ஆண்டு புகார் அளித்தார்.
தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் எல். முருகன் இந்த ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஆணையத்தில் இருந்து தி.மு.க. தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
விசாரணைக்கு ஆஜரான தி.மு.க அமைப்பு செயலாளரும், முரசொலி அறக்கட்டளை அறங்காவலருமான ஆர்.எஸ்.பாரதி, புகாரில் நில உரிமை குறித்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளதால்- அது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அதிகாரவரம்பிற்கு அப்பாற்பட்டது.
மேலும், புகார்தாரர் அரசியல் கட்சியான பா.ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர் அல்ல. ஆகவே இது அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்ட புகார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த ஒரு முடிவும் தெரிவிக்கப்படாததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ள திமுக எம்.பி.யும் வழக்கறிஞருமான பி. வில்சன், “இந்த புகாரின் நிலை என்ன என்பது குறித்து ஆணையத்திடம் கேட்டுப் பெற வேண்டும்” என்று மனு அளித்துள்ளார்.
இந்த புகாரின் நிலை குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து ஜூன் 13 ம் தேதிக்குள் விளக்கத்தைக் கேட்டுப்பெருமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசனிடம் நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார்.