சென்னை: சென்னையில்  ‘மெட்ராஸ் ஐ’ நோய் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விழியையும், கண் இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் ‘மெட்ராஸ் – ஐ’ எனக் கூறப்படுகிறது.  கண்நோய் எனப்படும் மெட்ராஸ் ஐ நோய் கடந்த  நவம்பர் மாதம் வேகமாக பரவியது. பின்னர், அது கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருவதாக  மருத்துவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். இந்த நோய் பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும் என்றும், , ‘மெட்ராஸ் – ஐ’ பிரச்னையால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படுத்திய பொருள்கள், துணிகள் போன்றவற்றை உபயோகித்தாலும் மற்றவா்களுக்கு அந்நோய்த் தொற்று பரவும் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

கண் எரிச்சல், விழிப் பகுதி சிவந்து காணப்படுதல், கண்ணல் இருந்து நீா் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை ‘மெட்ராஸ் – ஐ’-யின் முக்கிய அறிகுறிகளாகும்.

பொதுவாக ஒரு கண்ணில் ‘மெட்ராஸ் – ஐ’ பிரச்னை ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவா்கள், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என எழும்பூா் அரசு கண் மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சமீப நாட்களாக சென்னையில் மெட்ராஸ் ஐ நோய் பரவல் அதிகரித்து வருகிறது.  மெட்ராஸ்-ஐ தொற்றால் பாதிக்கப்பட்டு தினமும் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவர்கள் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளித்து வருவதாகவும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மெட்ராஸ்-ஐ தொற்றால் பாதிக்கப்படுவோர் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.