போபால்

மத்திய பிரதேசத்தில் பெரும்பாலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனி ஒருவராக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

ஊரடங்கு அறிவிப்பின் முந்தைய நாள், மார்ச் 23 அன்று சௌகான் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் வேறு யாரும்  அமைச்சராக பதவி ஏற்கவில்லை.

எனவே கொரோனா தடுப்பு பணி உள்ளிட்ட நடவடிக்கைகளில் முதல்வர் சௌகான், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளையே பெரிதும் நம்பி இருந்தார்.

இந்நிலையில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள், 40 காவல் துறையினர், 85 ஊழியர்கள் என மொத்தம் 130 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அமைச்சர்கள் யாருமின்றி, உயர் அதிகாரிகளும் இல்லாமல் ஒன்மேன் ஆர்மியாக முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கொரோனாத் தொற்று நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இச்சூழல் அவருக்கு மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

தலைநகர் போபால் மற்றும் முக்கிய நகரான இந்தூரில் கொரோனாத் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது வரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ள அம்மாநிலத்தில் சுகாதாரத் துறை அமைச்சரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.