மும்பை:

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்தர் அர்ஜூன்வார். சிறுவனான அர்ஜூன்வார் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயண ஆவணம் இன்றி பாகிஸ்தான் எல்லையை கடந்ததாக அந்நாட்டு வனத்துறை அதிகாரிகள் சேட்டா சவுக் பகுதியில் அர்ஜூன்வாரை கைது செய்தனர். இச்சிறுவன் தவறுதலாக எல்லையை கடந்து சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட அர்ஜூன்வார் உமர்கோட் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டான். சிறுவனது தண்டனை காலம் கடந்த 2104ம் ஆண்டு ஜூலை 14ம் தேதியுடன் முடிந்துவிட்டது. இதன் பின்னர் தூதரக ஒப்புதலுக்காக 2015ம் ஆண்டு ஜனவரியில் வழங்கப்பட்டது.

தற்போது 3 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் அர்ஜூன்வார் இந்திய குடியுரிமையை பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தண்டனை காலம் முடிந்து அச்சிறுவனால் விடுதலை ஆக முடியாமல் பாகிஸ்தான் சிறையிலேயே அடைபட்டு கிடக்கும் நிலை உள்ளது.

மும்பையை சேர்ந்த பாகிஸ்தான்&இந்தியா மக்களின் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான அமைப்பின் செயலாளரும், பத்திரிக்கையாளருமான ஜத்தின் தேசாய் இந்த வழக்கை பின் தொடர்ந்து வருகிறார். இது குறித்து கடந்த மார்ச் 5ம் தேதி வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜூக்கு கடிதம் எழுதப்பட் டுள்ளது. ஜிதேந்தரின் குடியுரிமையை உறுதிப்படுத்தும் பணி பரிசீலனையில் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.