போபால்: மத்திய பிரதேசத்தில் சலூன் கடைக்கு முடிவெட்ட சென்றவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பர்கோவன் கிராமத்தில் இந்தூரில் ஓட்டல் ஒன்றில் பணியாற்றி, திரும்பிய இளைஞர் ஒருவர், ஏப் 5ம் தேதி அங்குள்ள சலூன் கடைக்கு சென்று சிகையலங்காரம் செய்துள்ளார்.
சில நாட்களில் அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆகையால், அவர் சென்ற இடங்களை விசாரித்ததில் சலூன் கடைக்கு ஏப்.,5ம் தேதி சென்றவர்களை கண்டறிந்து அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டது.
மொத்தம் 12 பேரின் ரத்த மாதிரிகளை சோதித்ததில் 5 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், அந்த இளைஞர் உட்பட 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் திவ்யேஷ் வர்மா கூறியதாவது: கொரோனா பாதித்த நபருக்கு பயன்படுத்திய துணியையே மற்றவர்களுக்கும் பயன்படுத்தியதால் தொற்று பரவியிருக்கலாம். ஆனால் சலூன் கடை நடத்துபவருக்கு தொற்று இல்லை என்றார்.