டில்லி:
ம.பி.இடைத்தேர்தலில் பாஜவின் படுதோல்விக்கு கட்சியின் அகங்காரம் மற்றும் பாஜக அரசின் மோசமான நிர்வாகத்திற்கு கிடைத்த சாட்சி என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த மாதம் 24ந்தேதி ம.பி. மாநிலத்தில் முங்கோலி, கொலாராஸ் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இரு தொகுதிகளும் காங்கிரஸ் வசம் போயின. பாஜக பெரும் தோல்வியை சந்தித்தது.
அதுபோல சமீபத்தில் ராஜஸ்தான் மாநில அஜ்மீர், ஆல்வாரில் நடந்த இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.
இந்த மாநிலங்களிலும் பாஜக தலைமையிலான மாநில அரசு ஆட்சி செய்து வந்த நிலையிலும்,, மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்திருப்பது ஆளும் கட்சியின் மீது அதிருப்தி வளர்ந்து வருவதையே காட்டுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
இந்நிலையில், இடைத்தேர்தல் வெற்றி குறித்து அகில இந்தியா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
”மத்தியப் பிரதேச இடைத் தேர்தலில் ஆளும் பாஜக தனது 2 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது, அந்தக் கட்சியின் அகங்காரத்தையும், மோசமான நிர்வாகத்தையும் காட்டுகிறது.
முதலில் ராஜஸ்தானில் அந்தக் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டது. இப்போது மத்தியப் பிரதேசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதற்கு முன் ராஜஸ்தானின் ஆல்வார், அஜ்மீரிலும் பாஜக தோல்விஅடைந்தது. அங்கு காங்கிரஸ் சிறப்பாகச் செயல்பட்டது” என பதிவிட்டுள்ளார்.