பாஜகவின் செயற்குழு உறுப்பினரும், ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2 வது குறுக்கு தெருவில் உள்ள ஆசியானா அப்பார்ட்மெண்டிலுள்ள சொந்த வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2016 ம் ஆண்டு இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வாங்கிய ஒரு கோடி ருபாய் கடனை திருப்பி செலுத்தாததால் இவரது வீட்டிற்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்துள்ளனர்.
வங்கி அதிகாரிகள் வட்டிப்பணத்துடன் அசலையும் சேர்த்து ரூ1,21,30,867 பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனாலும் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் உரிய பதில் சொல்லாமல் மதுவந்தி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனம் மெட்ரோ பாலிட்டன் அல்லிகுளம் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
ஏற்கனவே மதுவந்தி தனியார் பள்ளியில் சீட்டு வாங்கித் தருவதாக ஐந்து லட்ச ரூபாய் மோசடி செய்த புகாரில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடிக்கு ரூபாய்க்கும் மேல் பணத்தை பெற்று திருப்பி கட்டாத காரணத்தினால் அவரது வீட்டை அதிகாரிகள் சீல் வைத்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.