டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான மாதிரி வாக்குச்சீட்டை தேர்தல் அலுவலர் மதுசூதன் மிஸ்திரி இன்று செய்தியாளர்களிடையே வெளியிட்டார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முழுநேரத் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து, செப்டம்பர் 24ந்தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கி 30ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் பலர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூத்த தலைவர்கள் சசிதரூர், மல்லிகார்ஜுன கார்கே ஆகியே இருவர் மட்டுமே போட்டியிடுகிறார்கள். இதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தல் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, போட்டியிடும் இரு தலைவர்களும், மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி, தேர்தலுக்கான வாக்குச்சீட்டு மாதிரியை செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தினார்.
இந்த வாக்குச்சீட்டில், மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இரு வேட்பாளர்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம் பெற்றுள்ளது. மேலும், வாக்களிக்கும் நபரின் விவரம், அவரது அடையாள அட்டை எண், இடம் உள்பட பல்வேறு தகவல்களை பதிவு செய்ய வேண்டும். அத்துடன், வாக்களிக்க தகுதியானவர்கள் இவர்களில் ஒருவரை தேர்வு செய்து, முத்திரை குத்தி வாக்குப்பெட்டியில் வாக்குகளை செலுத்த வேண்டும்.
தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியினர் சிலர் அதிருப்தி தெரிவித்துவந்த நிலையில், இந்த தேர்தல் ஜனநாயக முறையில்தான் நடைபெறுகிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் அலுவலர் வாக்குச்சீட்டு மாதிரியை வெளிப்படையாக காண்பித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.