சென்னை: துபாய் கண்காட்சியில் #MadeinTamilnadu என வாசகம் இடம்பெற்றுள்ளது.  ஆசியாவிலேயே மிகப்பெரிய உற்பத்தி மையமாக தமிழகத்தை உருவாக்குவதே தனது நோக்கம்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

4 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பங்கேற்றார். இந்திய அரங்கை பார்வையிட்ட அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு தளத்தை திறந்து வைத்தார். பின்னர் புர்ஜ் கலிபாவில் ஒளிபரப்பப்பட்ட செம்மொழி பாடலை கண்டு ரசித்தார்.

முன்னதாக துபாய் எக்ஸ்போ அரங்கை திறந்து வைத்து பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  கண்காட்சியில் தமிழ்நாடு வாரக் கொண்டாட்டத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அங்குள்ள அரங்கும் குறித்து பேசும்போது, தமிழ்நாட்டின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அரங்கு அமைந்துள்ளதாக கூறினார்.

அந்த அரங்கின் முகப்பில் ‘மேட் இன் தமிழ்நாடு’ என்ற இலச்சினை அமைக்கப்பட்டு உள்ளது.  இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில்  75-வது இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்  `வர்த்தகம் மற்றும் வணிக வாரம்’ கொண்டாடத்தின்போது,  சென்னை கலைவாணர் அரங்கில், `ஏற்றுமதியில் ஏற்றம், முன்னணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் ஏற்றுமதி மாநாடு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது எப்போதும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே இருந்தது இல்லை. அது இந்தியா முழுமைக்கும் பரந்த வளர்ச்சியாகத்தான் இருந்திருக்கிறது. உலகம் முழுவதும் பரவிய வளர்ச்சியாகவும் இருந்திருக்கிறது. நம்முடைய தயாரிப்புகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்.

இதை உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் `மேட் இன் இந்தியா’போல `மேட் இன் தமிழ்நாடு’ என்ற குரல் ஒலிக்க வேண்டும் என்பது, எங்கள் ஆசை மட்டுமல்ல, லட்சியமும்கூட. அந்த லட்சியத்தை நோக்கியே எங்கள் பயணம் அமைந்திடும். 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு அடைந்திட வேண்டும் என்ற இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

அவரது பேச்சை நினைவுகூறும் வகையிலும், தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையிலும், துபாய் கண்காட்சியில்  #MadeinTamilnadu லோகோ இடம்பெற்றுள்ளது.