சிம்பு நடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘மாநாடு’.

மாநாடு திரைப்படம் முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் சமீபகாலத்தில் வெளியான படங்களில் ரிப்பீட் ஆடியன்ஸை கொண்டு வந்த திரைப்படமாகவும் அமைந்தது.

இந்தப் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் இன்று பேசிய இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், சிம்பு குறித்து பேசியது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, இந்த விழாவில் எஸ்.ஏ.சி. பேசியதாவது :

“எவ்வளவு வெற்றிகள் கிடைத்தாலும் தாழ்ந்து போகவேண்டும் என்பது நான் கற்றது; அதனை எனது மகனுக்கும் சொல்லிக் கொடுத்துள்ளேன்” என்று பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர்

தொடர்ந்து பேசுகையில், “இந்த படம் சிம்புவுக்கு பெரிய திருப்புமுனை, இதற்காக தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு செய்திருப்பார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வெற்றி வந்த பின் வெற்றிவிழாவில் சிம்பு கலந்துகொள்ளாதது எனக்கு வருத்தம்” என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.

சமீபத்தில் காய்ச்சல் காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் சிம்பு தற்போது தனது அடுத்த படமான ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பிப்பில் பிஸியாக இருக்கிறார்.

மாநாடு படத்தின் வெற்றிவிழாவில் சிம்புவால் கலந்து கொள்ள முடியாத நிலையில், அவருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையே ஓ.டி.டி. ஒளிபரப்பு உரிமம் வழங்கியதில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

இந்த நிலையில், நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த சிம்புவையும் அவரது ரசிகர்களையும் வெகுவாக பாராட்டினார்கள்.