மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ம.நடராஜன், தேறி வருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் , மார்பில் தீவிர தொற்று ஏற்பட்டு மார்ச் 16ம் தேதி, சிகிச்சைக்காக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ளது, அவரது உடல் நிலை, கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் நடராஜனை மருத்துவமனையில் கவிஞர் வைரமுத்து இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து தெரிவித்ததாவது :
“நடராஜன் என் அன்புக்குரியவர். தமிழால் எனக்கு உறவானவர்.
நான் வந்திருக்கிறேன் என்று மருத்துவர் சொன்னதும், நடராஜன் கண் திறந்து பார்த்தார். என்னை அடையாளம் கண்டுகொண்டார். தன் வலது கையை 3 செ.மீட்டர் உயர்த்தினார். தன்னை தொடச்சொல்லி அவர் எனக்கு சமிக்ஞை காட்டினார். அவர் கையை பிடித்து நான் வைரமுத்து வந்திருக்கிறேன், விரைவில் குணமடைவீர்கள் என்றேன்.
இதற்கிடையில் அவரது உதட்டில் ஒரு புன்னகை ஓடி மறைந்தது, பிறகு கண்களை மெல்ல இமை மூடிக்கொண்டார். அவர் விரைவில் நலமடைவார் என்ற நம்பிக்கை இருக்கிறது, நலமுற வேண்டும் என்ற நம்புகிறேன். நலம் பெறுவார் என்றும் வாழ்த்துகிறேன்.
நேற்றை விட படிப்படியான முன்னேற்றம் அவரது உடல்நிலையில் தெரிவதாக மருத்துவர்கள் நம்பிக்கை கூறினர். புதிய முறையில் மருத்துவம் செய்யப்படுகிறது” என்று வைரமுத்து தெரிவித்தார்.