சென்னை
சசிகலாவின் கணவரும், புதிய பார்வை பத்திரிகை ஆசிரியருமான நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் செயல் இழந்ததால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக நடராஜன் (வயது 74) சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 10ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு குளோபல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு லண்டன் டாக்டர் முகமது ரேலா உட்பட ஒரு மருத்துவக் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
நடராஜனின் கல்லீரல் செயல் இழந்தது. தொடர்ந்து சிறுநீரகமும் செயல் இழந்து நுரையீரலில் நீர் கோர்த்துள்ளது. இதனால் உடலின் பல உறுப்புக்கள் செயல் இழந்து கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கல்லீரல் மாற்று சிகிச்சைக்காக உறுப்பு தான பதிவேட்டில் அவர் பெயர் பதிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென மீண்டும் உடல்நிலை மோசமடையவே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவாக கல்லீரல் கிடைத்தால் அவருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை செய்து மாற்றப்படும் எனவும் அவ்வாறு பொருத்தப் பட்டால் அவர் விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளது எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.