சென்னை: எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு நேர்வாக ரூ.1 இலட்சம் பொற்கிழி வழங்கப்படும் என  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நவம்பர் 1 ஆம் நாளை எல்லைப்போராட்டத் தியாகிகளை கெளரவிக்கும் வகையில் 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்கும் போராட்டங்களில்  ஈடுபட்டு சிறைச்சென்ற தியாகிகளை தமிழ்நாடு அரசு போற்றி சிறப்பித்து வருகிறது.

தற்போது எல்லைக்காவலர்கள் மொத்தம் சுமார் 110 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.5500/- ம் மருத்துவப்படியாக ரூ.500/-ம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் எல்லைக்காவலர்களின் மரபுரிமையர்கள் 137 பேருக்கு திங்கள்தோறும்  உதவித்தொகையாக ரூ.3000/- ம் மருத்துவப்படியாக ரூ.500/-ம் வழங்கப்பட்டு வருகிறது.

எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறைசென்று தியாகம்செய்து   தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக்காவலர்கள் 110 பேருக்கு  சிறப்பு நேர்வாக வரும் நவம்பர் 1ஆம் நாள் தலா ரூபாய் 1 இலட்சம் வீதம் பொற்கிழி வழங்கி கெளரவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.