சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில்  பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

கள்ளச்சாராயம் என தெரிந்ததே குடித்து உயிரிழந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் அருகே எதிர்பாராத பட்டாசு ஆலை விபத்தில் பலியான தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு வெறும் ரூ.3 லட்சம் மட்டுமே நிதி அறிவித்து உள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு வருவதாகவும்,  தமிழ்நாட்டு மக்களிடையே வேறுபாட்டை வளர்க்கிறார் எனவும்  சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டப்படுகிறது.

ஒரு மனிதர் இறந்தாலும் அது மாபெரும் இழப்பு, அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் என கொக்கரிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பார்வைக்கு சாத்தூர்  வெடிவிபத்தில் இறந்தவர்கள் இழப்பாக தெரியவில்லை போலும்… கள்ளச்சாராயம் போன்ற  போதை பொருள் விற்பனையிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்பதையும் அவர் ஒப்புக்கொள்வது போல உள்ளது அவரது பேச்சு. 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவுயை முதலமைச்சர் ஸ்டாலின்அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில்  தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில்  அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (45), நடுச்சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி (40), வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (35) மற்றும் மோகன் (30) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.