சென்னை: தமிழகஅரசின் நடவடிக்கையால், முகஅறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சிறுமி டானியா இரண்டாவது கட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்.
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடி வீராபுரம் ஸ்ரீவாரி நகரை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் சவுபாக்யா தம்பதியின் மகள் டான்யா என்ற 9 வயது சிறுமி, தனது நிலை குறித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தனக்கு சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதையறிந்த முதலமைச்சர், அந்த சிறுமிக்கு தேவையான உதவிகள் வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து, அமைச்சர் நாசர், அந்த சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோர்களை சந்தித்து, பேசி, சிறுமியின் நோய் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிஅளித்தார்.
தொடர்ந்து, சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ நிபுணர்களைக்கொண்டு, பல்வேறு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், சிறுமி டான்யாவுக்கு அரியவகை முகச்சிதைவு நோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது. அதைத்தொடர்ந்து, சிறுமி டான்யா, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் டான்யாவுக்கு 31 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் சுமார் 9 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து, சிறுமியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது சிறுமியின் முகம் பழைய நிலைக்கு எப்போது வரும், முகத்தில் உள்ள புள்ளிகள் எப்போது மறையும், அடுத்த முறை நான் டானியாவை பார்க்க வரும் போது அவரது முகத்தில் புள்ளிகள் நீங்கியிருக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உடல்நிலை தேறினார். முகச்சிதைவுக்கு அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமி டான்யா நலமுடன் வீடு திரும்பினார்.
இந்நிலையில் சிறுமிடானியா, மீண்டும் சிகிச்சைக்காக தண்டலம் சவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . சிறுமி டான்யாவை நேரில் சந்தித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் நலம் விசாரித்தார். அப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுமி டான்யாவை நலம் விசாரித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.