சென்னை:

அமெரிக்காவில் நடைபெறும் ‘தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற லிடியன் நாதஸ்வரத்தை இந்தியாவின் இசை தூதுவராக நியமிக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.


‘தி வேர்ல்ட் பெஸ்ட்’ என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதனை புகழ்பெற்ற ஹாலிவுட் தொகுப்பாளரான ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்குகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் குழுவாகவும் , தனி நபராகவும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த பியானோ கலைஞரான சிறுவன் லிடியன் நாதஸ்வரமும் போட்டியிட்டு, இறுதிச் சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

சாம்பியன் பட்டத்துடன் சென்னை வந்த லிடியனை ரஹ்மான் நேரில் சென்று வரவேற்றார்.  இதனையடுத்து நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் கலந்துகொண்ட ஏஆர். ரஹ்மான் லிடியனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

“மேஜிக் மற்றும் அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார் லிடியன். முதன்முதலில் அவரை நான் சந்தித்தபோதே, எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. சீனாவின் பியானோ கலைஞர் லங்லங்கிற்கு சவாலாக இருப்பார்.

சென்னையில் நான் நடத்திவரும் கேஎம் மியூசிக் பள்ளி மாணவரான லிடியன்,11-வது ஆண்டு விழாவில் பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

இசையின் மந்திரத்தை லிடியன் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தியாவின் இசை தூதுவராக லிடியனை நியமிக்க வேண்டும்” என்றும் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.

மேலும், சாம்பியன் பட்டம் வென்ற லிடியன் எதிர்காலத்தில் தனியாக இசையமைத்து ஆல்பம் வெளியிட வேண்டும் என்றும் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.

150 நாடுகளிலிருந்து கலைஞர்கள் பங்கேற்ற போட்டியில் லிடியன் நாதஸ்வரம் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து 13-வயது லிடியன் நாதஸ்வரம் கூறும்போது, ” இதுதான் எனக்கு முதல் போட்டி. இதில் நான் பதற்றம் அடையவில்லை. இசை ஆல்பம் தயாரிக்க வேண்டும். இசையமைப்பாளராக வேண்டும் என்பதே என் ஆசை. மேலும் நிலவுக்குச் சென்று பியானோ வாசிக்க வேண்டும் என்பது என் கனவு என்றார்.