சென்னை: இன்று நள்ளிரவில் சந்திர கிரகணம் ஏற்பட இருப்பதால், இன்று மாலை முதல் நள்ளிரவு வரை, திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்பட பல கோவில்களில் இன்று நடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி,   இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான  கோவில்களில்  இரவு 7  மணி முதல் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

2023 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று இரவு  நிகழவுள்ளது. சூரியனுக்கும், நிலவுக்கும் இடையில் பூமி பயணிக்கும்போது, பூமியின் நிழலானது நிலவினை மறைப்பதால் இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரகிரகணமானது எப்போதும் பௌர்ணமி நாள்களில்தான் நிகழும். கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றது.

ஏற்கனவே, கடந்த 14ஆம் தேதி ( அக்டோபர்) சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்த சூரிய கிரகணமானது,  178 ஆண்டுகளுக்குன்பின் மகாளய அமாவாசை தினத்தில் நிகழ்ந்தது. ஆனால், அது இந்தியாவில் தெரியவில்லை. அதேசமயம் சூரிய கிரகணத்தை தொடந்து சந்திர கிரகணம் ஏற்படுவது உண்டு. அந்த வகையில் இன்று (அக்டோபர் 28) நள்ளிரவு மற்றும் நாளை (அக்டோபர் 29) அதிகாலைக்குள் இடைப்பட்ட நேரத்தில் கிரகணம் ஏற்படுகிறது. இதனை இந்தியா முழுவதும் மிக எளிதாக காணலாம்.

 நிலையில், இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ்கிறது.  இன்று நிகழும் சந்திர கிரகணம் பகுதி நேரமாக இந்தியாவில் தெரியவிருக்கிறது.

இது இன்று (அக்டோபர் 28ஆம் தேதி) நள்ளிரவு 11.31 மணிக்குத் தொடங்கி மறுநாள் அதாவது 29ஆம் தேதி அதிகாலை 3.36 மணி வரை நிகழ்கிறது.

இந்த சந்திர கிரகணமானது ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, வட-கிழக்கு தெற்கு அமெரிக்கா, பசுபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக், அன்டார்ட்டிக்கா பகுதிகளில் தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அடுத்த சந்திரகிரகணமானது 2025ஆம் ஆண்டு மார்ச் 13 – 14ஆம் தேதிகளில் நிகழவிருக்கிறது.

சந்திர கிரகணம் தோஷ காலமாக கருதப்படுவதால் இன்று இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களில் நடைகளும் சில மணி நேரமும் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இரவு 7  மணி முதலே அங்காங்கே கோயில் நடை சாத்தப்பட உள்ளது.

திருப்பதி கோவில் நடை இரவு சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல தமிழ்நாட்டில் பழனி முருகன் கோயிலில் இரவு 8 மணிக்கும், திருப்பரங்குன்றம் கோயிலில் 7 மணிக்கும், சமயபுரம் கோயிலில் 6 மணிக்கும், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் மாலை 5.30 மணிக்கும், பண்ணாரி அம்மன் கோயிலில் 6 மணிக்கும்,ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இரவு 10 மணிக்கும் நடை சாத்தப்பட உள்ளது. இதேபோல் அனைத்து கோயில்களில் தரிசனம் மற்றும் பூஜை நேரம் ஆகியவை மாற்றப்பட்டுள்ளதால் பக்தர்கள் தங்கள் கோயில் செல்வதை திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை (அக்டோபர் 29)சந்திர கிரகணம் முடிந்ததும் கோயில்கள் சுத்தம் செய்யப்படும். தொடர்ந்து அதிகாலை  5 மணியளவில் நடை திறக்கப்பட்டு கலச பூஜை, கலச அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை மற்றும் நித்ய பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.