சென்னை:
முதல்வர் ஜெயலலலிதாவின் தொகுதியான தண்டையார்பேட்டை பகுதியில் கடந்த வாரம் பள்ளி படிக்கும் சிறுவன் நேதாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் சாக்லேட் வாங்கி சாப்பிட்டதும் மயங்கி விழுந்தான். அவன் சாப்பிட்ட சாக்லெட்டில் போதை மருந்து கலந்துள்ளது மருத்துவமனை ஆய்வில் தெரியவந்தது.இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து மாநிலம் முழுவதும் பள்ளி கல்லூரி அருகே உள்ள கடைகளில் போதை சாக்லெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தில் உள்ள சுடுகாட்டு பகுதியில் மூட்டை மூட்டையாக சாக்லெட்டுகள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குவியல் குவியலாக கிடந்த சாக்லெட்டுகளை கைப்பற்றினர். சுடுகாட்டில் கிடந்த சாக்லெட்டுகள் போதை கலந்த சாக்லெட்டுகள் என்பது தெரிய வந்தது.
இந்த போதை சாக்லெட்டுகள் சென்னையிலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்டத? அல்லது தென்மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டதா?
போதை சாக்லெட்டுகளை யார் கொட்டி சென்றார்கள்? என போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.