சென்னை
கடந்த 4 நாட்களாக நடந்த எல் பி ஜி டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. சங்க உறுப்பினர்களின் டேங்கர் லாரிகள் மூலம் மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாஸ் சிலிண்டர்களில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு ஏற்றி செல்லப்பட்டு வருகின்றன.
எண்ணெய் நிறுவனங்களுடன் நடைமுறையில் உள்ள ஒப்பந்தம் ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைய உள்ளது. பிறகு செப்டம்பர் மாதம் முதல் புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்தபுதிய ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளில் சில தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், எனவே விதிமுறைகளை தளர்த்த வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் கோரிக்கைகள் நிறைவேறவில்லை. கடந்த 24-ந் தேதி வரை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு சாதகமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. என்பதால் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 27-ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 27-ம் தேதி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. தென் மாநிலம் முழுவதும் கடந்த 4 நாளாக டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் தொடர்ந்து நடைபெற்றதால் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. எனவே, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
தற்போது தென் மாநிலங்ங்கள் முழுவதும் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை \ ஏற்றதை அடுத்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.