டில்லி

சிபிஐ நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் அனைத்து ஆவணங்களையும் மனுதாரர்களுக்கு தர வேண்டும் என மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2005ஆம் வருடம் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சோராபுதீன்,  அவர் மனைவி கௌசர், மற்றும் அவருடைய கூட்டாளிகள் துளசிதாஸ்,  பிரஜாபதி ஆகிய  அனைவரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.    காவல்துறையினர் அவர்கள் அனைவரும் லஷ்கர் ஈ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கூறினர்.   ஆனால் இது ஒரு போலி என்கவுண்டர் எனவும் இதற்கு சில காவல்துறை அதிகாரிகள் மற்றும் அப்போதைய அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு இதற்கு தொடர்பு இருந்ததாகவும் புகார் எழுந்தது.

இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிபதி பி எச் லோயா விசாரித்து வந்தார்.   இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி ஒரு உறவினர் வீட்டு திருமண நிகழ்வுக்காக நாகபுரி சென்றிருந்தார்.   லோயா அங்கு மாரடைப்பால் உயிரிழந்தார்.   மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் லோன் இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.   இதே போல மற்றொரு மனுவும் ஒரு சமூக ஆர்வலரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா அரசு தங்களுக்கு மருத்துவ சான்றிதழ் உட்பட இந்த வழக்கு சம்பந்தப்பட்ட  அனைத்து ஆவணங்களையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்திடம் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.   இது குறித்து உச்ச நீதிமன்றம் மகாராஷ்டிரா அரசின் கருத்தை கேட்டிருந்தது.   மகாராஷ்டிரா அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே அரசுக்கு இதை அளிப்பதில் எந்த ஒரு ஆட்சேபமும் இல்லை எனவும் ஆனால் அதில் உள்ளவற்றை பகிரங்கப் படுத்தக் கூடாது எனவும் கூறினார்.

அதை ஒட்டி மகாராஷ்டிர அரசு லோயாவின் மரணம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் மனுதாரருக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.