நியூயார்க்: இன்சுலின் போன்ற அன்றாடம் தேவைப்படும் மிக அத்தியாவசிய மருந்துகள் சாதாரண மக்கள் வாங்கும் விலையில் இருப்பது அவசியம் என்று கூறியுள்ளார் கொடை வள்ளலும் பயோகான் நிறுவனருமான கிரண் மஸூம்தார் ஷா.
ஒரு நாளில் தேவைப்படும் இன்சுலினை 10 அமெரிக்க சென்ட்ஸ் விலைக்கு குறைவாக, நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் உடைய நாடுகளில் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நடுத்தர மற்றும் குறைந்த வருமானமுடைய நாடுகள்தான் உலகின் 80% நாடுகள். அவைதான் உலகின் நோய் சுமையைத் தாங்கி வருகின்றன. எனவே, அந்த நாடுகளின் மக்கள் இன்சுலின் போன்ற மிக முக்கியமான ஒரு மருந்தை குறைந்த விலையில் பெறுவது அவசியம்.
அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஆஃப்ரிக்காவாக இருந்தாலும் சரி குறைந்த விலை இன்சுலின் என்பது அவசியம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் கொண்ட அரசுகள் தங்களுக்கு தேவையான இன்சுலினை பயோகான் நிறுவனத்திடமிருந்தே வாங்கிக் கொள்ளலாம். தற்போது, ஒரு நாளுக்கு தேவையான இன்சுலின் அளவு 36 அமெரிக்க சென்ட்ஸ் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.