சென்னை: உணவகங்கள் உள்பட போதிய அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு அரசு அவசர கதியில் திறந்த கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தால், சென்னையில் வசித்து வரும், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். சென்னை நகர்ப்பகுதியில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் கிளாம்பாக்கம் அமைந்துள்ளதுடன், அங்கு நேரடியாக பயணிகள் செல்லும் வகையில், நேரடி பேருந்து வசதியோ, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் வசதிகளோ இல்லாத நிலையில், ஏறக்குறைய 3மணி நேரம் பயணித்து, மேலும் அதிக செலவுகளை செய்துதான், பொதுமக்கள் கிளாம்பாக்கம் சென்றடைய வேண்டியது உள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், அங்கு ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் உணவகங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்படாதது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.14.30 கோடியில் காவல்நிலையம் அமைக்க கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், ஆம்னி பேருந்து தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று உள்ளது என்று கூறியவர், ஆம்னி பேருந்துகளுக்கான பேருந்து நிலையம், முடிச்சூரில் ஆ கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் ஏப்ரலில் நிறைவு பெறும் என்றும் கூறினார்.
மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் பயன்பெறும் வகையில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அதுபோல, கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கு கிளாம்பாக்கத்தில் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.