டெல்லி: வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் ஒடிசா கடற்கரை பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 5ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.  இது இன்று நள்ளிரவு, மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூருக்கு இடையே கலிங்கப்பட்டணம் அருகே  கரையைக் கடக்கக் கூடும்.

இதன் காரணமாக,  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் செப்டம்பர் 5ஆம் தேதி  7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும்,  வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா ஆகிய பகுதிகளில் மழையுடன்  மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் இன்று மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.