சென்னை; தமிழகம் நோக்கி  காற்றழுத்த தாழ்வு மண்டலம்  நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று காலை 10 மணி வரை சென்னை உள்பட சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் அறிவித்து உள்ளது.

குருசாமி பாலம் அருகே உள்ள சேத்துப்பட்டு குசாலாம்பாள் கல்யாண மண்டபத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. 100 அடி சாலையில் பெரியார் பாதை பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. பாதுகாப்பாக இருங்கள் மற்றும் கவனமாக ஓட்டுங்கள் என  காவல்துறை தெரிவித்து உள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இன்று மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுவடையும். 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா கடற்கரை நோக்கி வரும். பின்னர் ஓமன் நோக்கிச் சென்று வலு குறையும்  என தெரிவித்துள்ள வானிலை மையம்,  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து இன்று காலை செடன்னை  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மழை காரணமாக தண்ணீர் தேங்கும் வாய்ப்புகள் உள்ளன. மழைநீர் தேங்கும் போது, சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும். ஆங்காங்கே பாதுகாப்பற்ற கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந் நிலையில் நாளை முதல் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்து இருந்தது. மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும் வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை இடைவிடாது கொட்டியது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார், சைதாப்பேட்டை, கிண்டி என பல பகுதிகளில் மழை பெய்துள்ளது.தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீடுகளிலேயே அடைபட்டு கிடக்கின்றனர்.