
சென்னை:
வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்றுதான் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் செயல்பட தொடங்கின.
இந்நிலையில், இன்றும் சென்னை உள்பட பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன், வங்க கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக கூறி உள்ளார்.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறக் கூடும் என்றும், இதன் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உள்ளார்.
ஏற்கனவே இலங்கை அருகே உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து, அரபிக்கடலுக்கு சென்று விட்டதாகவும், தெற்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.
[youtube-feed feed=1]