கோவை: குறைந்த வட்டியில் கடன் என மோசடியில் ஈடுபட்ட நபர்,  ரூ.6.5 கோடி மதிப்பிலா போலி 500 ரூபாய் நோட்டுக்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட  நபர் வீரமணி  என்று கூறப்படுகிறது. அவருக்கு பின்னணியில் செயல்பட்டவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படடு வருகிறது.

“சூலூர் பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி. இவர் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் நடத்தி வரும் நிலையில், மகளிருக்கு தொழில் ஆலோசனைகள் வழங்குவது, வங்கிகளில் கடன் பெற்று கொடுப்பது உள்ளிட்ட பணிகளையும் செய்து வந்துள்ளார். இவரை சந்தித்த வர்கீஸ் என்ற நபர்,   இவருக்கு செலக்கரிச்சல் கிராமத்தைச் சேர்ந்த விஜயா என்பவர் அறிமுகமாகி, 50 பைசா வட்டிக்கு கோடிக்கணக்கில் பணம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.

இதை நம்பி சுகந்தி ஆரம்பத்தில், ரூ.50 ஆயிரம், ஒரு லட்சம் கடன் வாங்கியுள்ளார். தொடர்ந்து கடந்த வருடம் வர்கீஸ் இறந்த நிலையில், அவர் நடத்திய அறக்கட்டளைக்கு தலைவராக பதவியேற்றுள்ளதாக விஜயா அனைவரிடமும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சுய உதவிக் குழுக்களை அணுகி மாற்றுத்திறனாளிகளுக்கு கோடிக்கணக்கில் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக முன்பணமாக 3 பேரிடம் ரூ.15 லட்சம் பெற்றுள்ளார். இதனையடுத்து, பணம் கொடுத்து 2 மாதங்களான நிலையில் சுகந்தியை தொடர்பு கொண்டு, உங்களுக்கு ரூ.6.5 கோடி பணம் வந்துள்ளாதாக விஜயா தெரிவித்துள்ளார். மேலும், பணத்தைப் பெற்று தருவதற்கு ஒரு சதவீதம் கமிஷனாக, ரூ.6.5 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியதாக சுகந்தி தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து சுகந்தி அந்த  பணத்தை பார்க்க வேண்டும் என சு கூறவே, அவர்களை பழனிக்கு வரவழைத்து காருக்குள் கட்டு கட்டாக பணம் இருந்ததை காண்பித்துள்ளனர். இதனை நம்பி சுகந்தி தரப்பினர் ரூ.3 லட்சம் கொடுப்பதாகவும், ரூ. 6.5 கோடி பணம் கையில் கிடைத்தவுடன் மீதி பணத்தை தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, விஜயா தரப்பில், காரைக்குடியைச் சேர்ந்த வீரமணி என்பவர் மூலமாக பணம் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளது.  வீரமணி கொண்டு வந்த  பணத்தை வீட்டில் வைத்து வீட்டை இரண்டு பூட்டுகளை கொண்டு பூட்டி ஒரு சாவியை சுகந்தி தரபினரிடம் வழங்கிவிட்டு, மற்றொரு சாவியை எடுத்துக்கொண்டு  சென்றதாக கூறப்படுகிறது.

பணத்தை முழுமையாக தராமலும், ஒரு சாவியை அவர் எடுத்துச்சென்றதால்,  சந்தேகமடைந்த சுகந்தி தரப்பினர், அவர்களிடமிருந்த சாவியால பணம் வைக்கப்பட்டிருந்த அறையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, அங்கு 500 ரூபாய் சாயலில் போலி தாள்கள் அடங்கிய கட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தாம் ஏமாற்றமடைந்ததை அறிந்த சுகந்தி தரப்பினர், விஜயா மீது சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்,” புகாரை பதிவு செய்த போலீசார்,போலி நோட்டுக்கள் சப்ளை செய்யும் கும்பலை கூண்டோடு பிடிக்க முடிவு செய்து, பாதிக்கப்பட்ட சுகந்தியிடம் சில  ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அதன்படி, பணத்துக்கு தர வேண்டிய மீதமுள்ள கமிஷன் தொகையை தருவதாகவும், அதை பெற்றுக்கொள்ளும்படியும்  விஜயாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சுகந்தியை தேடி வந்த விஜயாவின் ஏஜென்ட் வீரமணி பணத்தை வாங்க வந்தபோது, அவரை வீட்டின் அறைக்குள் விட்டு பூட்டு போட்டுவிட்டு, இதுகுறித்து  சூலூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் கதவை திறந்து வீரமணியை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப் பட்ட விசாரணையில், “இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது. தன்னிடம் விஜயா இந்த பணம் பண்டலை சுகந்தியிடம் கொடுத்துவிட்டு வர சொன்னார். அதற்காக 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக கூறினார்” என்று தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த விவரம் அறிந்த விஜயா தலைமறைவான நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், இந்த மோசடி கும்பலுக்கு துணையாக உள்ளவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.