திருப்பத்தூர்,
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனது பெற்றோர் மற்றும் தங்கையை கொலை செய்துவிட்டு, யாரோ கொலை செய்திருப்பதுபோல நாடகமாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை சந்தை வீதியை சேர்ந்த மின்வாரிய அதிகாரி மோகன், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் சுகன்யா, மகன் தமிழரசன் ஆகியோர் கழுத்தறுக்கப்பட்டு கிடந்ததாகவும், அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதும், வாலிபர் மட்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் தெரிந்ததே.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பெற்றோர் மற்றும் தங்கையை கொலை செய்தது அவர்களது மகனான தமிழரசன் என்பது தெரியவந்துள்ளது.
சுகன்யாவுக்கு வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் நடந்தது. இந்த நிலையில்தான் சுகன்யா மற்றும் அவரது பெற்றோர் உள்பட 3 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட மின்வாரிய அதிகாரி மோகனின் மகன் தமிழரசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து போலீசார் தமிழரசனிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது தமிழரசன் கூறியதாவது:
நான் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். என்னுடன் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவருடன் எனக்கு காதல் மலர்ந்தது. இருவரும் வேறுவேறு ஜாதி என்பதால் எங்களது திருமணம் நடைபெறுவது சிக்கலாக இருக்கும் எண்ணினேன். அதனால் எங்களது காதலை எனது பெற்றோரிடம் கூறி, அவர்களது சம்மதத்துடன் திருமணம் செய்யும் எண்ணத்தில் இருந்தேன்.
தற்போது தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால் எனது காதலை பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்தேன்.
ஆனால், வார விடுமுறைக்கு நாங்கள் ஊருக்கு வந்தபோது, எனது தங்கை எனது காதல் விவகாரத்தை எனது பெற்றோரிடம் சொல்லிவிட்டாள். மேலும் நான் எனது காதலியின் அவசர தேவைக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்திருந்தேன். அதையும் கூறிவிட்டாள்.
இதன் காரணமாக எனது பெற்றோர் என்னை கண்டித்தனர். காதலை கைவிடும்படி எச்சரித்தனர். இதனால் எனக்கு கடும் கோபம் உண்டாது.
மேலும் என் காதலை காட்டிக்கொடுத்த தங்கை மீது பயங்கர ஆத்திரம் ஏற்பட்டது. அன்று இரவு எனது தந்தை இரவு பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில் நான், எனது அம்மா மற்றும் தங்கை ஆகியோர் மட்டுமே இருந்தோம்.
அப்போது, எனது அம்மாவிடம், நான் காதலிக்கும் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்.. நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள் என்று கெஞ்சினேன்.
ஆனால் எனது அம்மாவோ ஒத்துக்கொள்ளவில்லை. அன்று இரவு முழுவதும் எனது காதல் விவகாரத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இடையிடையே எனது தங்கையும் குறுக்கிட்டு பேசியதால் பிரச்சினை மேலும் வளர்ந்தது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த கத்தியால் தங்கையை தாக்கினேன். மேலும் காதலின் மேல் இருந்த வெறியாலும், எனது காதலை காட்டி கொடுத்த ஆத்திரத்தாலும் எனது தங்கையின் கழுத்தை கத்தியால் வெட்டினேன்… மேலும் அதை தடுக்க வந்த என் தாயையும் கத்தியால் வெட்டினேன். அதில் இருவரும் இறந்துவிட்டனர் என்று கூறினார்.
மேலும், இரவு வேலை முடிந்து எனது அப்பா வந்து கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்தேன். அவரையும் காலி செய்துவிட்டால் தப்பித்துவிடலாம் என்று எண்ணி, இரவு பணி முடிந்து அதிகாலை வீட்டுக்கு வந்த அவரை யும் கத்தியால் வெட்டினேன்.
தந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக எனது மார்பில் கத்தியால் கீறி கொண்டேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணையில், தாய், தந்தை, தங்கையை முகமூடி அணிந்த நபர் வெட்டிக் கொன்று விட்டதாகவும், தன்னையும் கொல்ல முயன்றதாகவும் நாடகமாடியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் தமிழரசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.