சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று,  மத்தியில் தாமரை மலர வேண்டும்; தமிழகத்தில் இரட்டை இலை வலுப்பெற வேண்டும்; இதுவே எங்கள் கோஷம் என்று தமிழக பாஜக தலைவர் கூறி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த கூட்டணியில், பாமக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சி உள்பட சில கட்சிகள் இணைந்துள்ள நிலையில், தமாகாவுடன் நடைபெறும் பேச்சில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக மட்டும் தமிழகம் வருகிறார் என எதிர்கட்சிகள் கூறுவது தவறு என்றவர்,  பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் வரும் போதெல்லாம் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த வித மத கலவரமும் வரவில்லை, நம் நாடு பாதுகாப்பாக உள்ளது, என்றால் அதற்கு காரணம் பாஜக அரசு தான் என்றவர்,  நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் கட்சி எங்கே போட்டியிட சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன். தமிழகம் முழுவதும் சென்று வருவது போல் தூத்துக்குடியில் கட்சி சார்ந்த நிகழ்ச்சி வருவதால் அடிக்கடி சென்று வருகிறேன் என்று தெரிவித்தவர்,  நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று,  மத்தியில் தாமரை மலர வேண்டும்; தமிழகத்தில் இரட்டை இலை வலுப்பெற வேண்டும்; இதுவே எங்கள் கோஷம் என்று என்றும் தெரிவித்தார்.