கோவை:

லாட்டரி அதிபர் மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரி காசாளர் மர்மமான விதத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டதாரா அல்லது தற்கொலை செய்தாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள மார்ட்டினக்கு சொந்தமான சுமார் 70 இடங்களில்  கடந்த 30ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கோவையில் 22 இடங்கள், சென்னையில் 10 இடங்கள், கொல்கத்தாவில் 18 இடங்கள், மும்பையில் 5 இடங்களிலும், மேலும் அவருக்கு சொந்தமான  ஐதராபாத், கவுஹாத்தி, சிலிகுரி, கேங்டாக், ராஞ்சி ஆகிய நகரங்களிலும் சோதனை நடைபெற்றது. இதில்  வரி ஏய்ப்பு தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட தாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  மார்ட்டினுக்கு சொந்தமான  ஹோமியோபதி கல்லூரியில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, கல்லூரியின் கேசியர் பழனி என்பவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, பழனி, தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது.  அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் துடியலூரிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில், பழனியின் உடல் வெள்ளியங்காடு மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எதிரே உள்ள குட்டையில்  பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த பழனி எப்படி அங்கு சென்றார், அவரை யாரும் கடத்திச்சென்று கொலை செய்தனரா என்பத குறித்து  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.