சென்னை

யணிகளின் ஆதார் மற்றும் பான் கார்டுகள் சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் குவிந்து கிடந்ததால் பரபரப்பு உண்டானது.

தலைநகர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதிய பன்னாட்டு ஒருங்கிணைந்த விமான முனைய வருகை பகுதி 6-வது வாசல் அருகே ஒரு குப்பைத் தொட்டி உள்ளது. அதில் குவியல், குவியலாகப் பயணிகளின் ஆதார், பான் கார்டுகள், அடையாள அட்டைகள் கொட்டி கிடந்தன.

இதைக் கண்டு அங்கிருந்த விமான பயணிகள் மற்றும் பயணிகளை வரவேற்று அழைத்துச் செல்ல வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர், அங்குக் கொட்டி கிடந்த ஆதார், பான் கார்டுகளை கையில் எடுத்துப் பார்த்தனர். அங்குப் பாதுகாப்புக்கு நின்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவலர்கள், அவர்களைத் தடுத்து விமான நிலைய ஊழியர்கள் வைத்துச் சென்று உள்ளதாக தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள்,

”மக்களின் முக்கியமான அடையாள ஆவணம் ஆதார் கார்டு. வருமான வரிக்கான நிரந்தர கணக்கு எண் கொண்டது பான் கார்டு ஆகியவற்றை விமானத்தில் செல்ல வரும் பயணிகள் தவறுதலாக விட்டுச் செல்கின்றனர். கேட்பாரற்று விமான நிலையத்துக்குள் கிடக்கும் கார்டுகளை விமான நிலைய ஊழியர்கள் எடுத்து விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைப்பார்கள்.

குறிப்பிட்ட காலத்துக்கு அங்கு வைக்கப்பட்டிருக்கும் கார்டுகளை, தவற விட்டவர்கள் வந்து பெற்றுச் செல்வார்கள். சில கார்டுகள் நீண்ட காலமாக யாரும் வராமல் தேங்கிக் கிடக்கின்றன.  கார்டுகளை தவற விட்டவர்கள் சிலர் இணைய தளம் மூலமாக புதிய ஆதார் கார்டுகள் எடுத்துகொள்கின்றனர்.  கார்டுகளை தவற விட்டவர்கள் மீண்டும் வந்து கேட்காத கார்டுகளை அப்புறப்படுத்தி உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது”

என்று தெரிவித்தனர்..