சென்னை,

ரக்கு லாரி உரிமையாளர்களுடன் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பேச்சு நடத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் லாரி உரிமையாளர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்திய போக்குவரத்து துறை அமைச்சருக்கு, பிரச்சினை குறித்த அடிப்படை கூட தெரியவில்லைஎன்று குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்க ளில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும், சுங்கக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் சரக்கு லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

நேற்று தமிழக அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தொல்வியடைந்ததை தொடர்ந்து போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் கூறினர்.

இன்று 2வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக விலைவாசிகள் உயரத் தொடங்கி உள்ளது.

முதல் நாள் போராட்டத்திலேயே தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சரக்குகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சரக்கு லாரி உரிமையாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் மத்திய அரசு, மாநில அரசு ஆகிய இரண்டும் சம்பந்தப்பட்டவை என்றாலும், அவர்களின் முதன்மையான கோரிக்கை எரிபொருள் மீதான வாட்வரி உயர்வு சம்பந்தப்பட்டது என்பதால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.

ஆனால், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் சரக்கு லாரி உரிமையாளர்களுடன் போக்கு வரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்திய விதத்தைப் பார்க்கும் போது இந்த பிரச்சினையை தீர்ப்பதில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது மட்டுமின்றி, இச்சிக்கலின் அடிப்படை கூட போக்குவரத்து அமைச்சருக்கு தெரியவில்லை என்பது தெளிவாகிறது.

ஏதேனும் முக்கியப் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் ஒரு துறையின் அமைச்சர் பேச்சு நடத்தும்போது அத்துறையின் செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருக்க வேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் துறை சார்ந்த புள்ளி விவரங்கள் அதிகாரிகளிடம் தான் இருக்கும்; ஒரு கோரிக்கையை நிறைவேற்றுவதால் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும் என்பது குறித்த விவரங்களை அவர்கள் தான் கணக்கிட்டு சொல்வார்கள். அமைச்சர் என்பவர் கொள்கை வழிகாட்டுதலை மட்டுமே வழங்க இயலும்.

ஆனால், நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுக்களில் போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை.

அதிகாரிகள் இல்லாத சூழலில் சரக்குந்து உரிமையாளர்களின் கோரிக்கைகள், அவற்றை ஏற்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் போன்றவை குறித்து அமைச்சரால் தெளிவான முடிவுக்கு வர இயலாது.

அதனால் தான் நேற்றைய பேச்சுக்களின் போது எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறிய அமைச்சர், முடிவெடுக்க அவகாசம் கோரியுள்ளார்.

தொடர் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக 3 வாரங்களுக்கு முன்பே அறிவித்து விட்ட, சரக்கு லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள், அதுகுறித்த மனுவையும் போக்குவரத்து ஆணையரிடம் அளித்துள்ளனர்.

அதன்பின் 20 நாட்களாகியும் அதுகுறித்த தகவல் அமைச்சருக்கு தெரிவிக்கப்படவில்லை. நேற்றைய பேச்சுக்களின் போது அதுகுறித்த அறியாமையை அமைச்சர் வெளிப்படுத்திய பிறகு தான் போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் அம்மனுவின் நகலை அமைச்சரின் பார்வைக்கு வைத்துள்ளார்.

தமிழகத்தில் அரசு எந்திரம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை. வலுவாக கட்டமைக்கப்பட்ட அமைப்புகளின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவுக்கே இந்த நிலைமை என்றால், அப்பாவி மக்கள் தரும் மனுக்களின் கதியை நினைத்தால் அதிர்ச்சியே மிஞ்சுகிறது.

சரக்குந்துகள் வேலைநிறுத்தம் காரணமாக தென் மாநிலங்களில் 30 லட்சம் சரக்குந்துகள் ஓடாததால் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.10,000 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. தமிழகத்தில் 4.5 லட்சம் சரக்குந்துகள் ஓடாததால் ரூ.2,000 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேங்கிக் கிடக்கின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை முட்டைகள் போன்ற எளிதில் அழுகக்கூடிய பொருட்கள் தான் அதிக அளவில் தேங்கியுள்ளன. உடனடியாக வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படாவிட்டால் அந்த பொருட்கள் அழுகி பெரும் இழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. அதுமட்டுமின்றி, அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை உயரக்கூடும்.

-இவற்றை உணர்ந்து சரக்கு லாரி உரிமையாளர்களுடன் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பேச்சு நடத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.