சென்னை,

வாக்காளர்கள் ஓட்டுப்போட பணம், பரிசுப் பொருட்கள் வாங்கவேண்டாம் என ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொகுதி மக்களுக்கு இந்திய துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ந்தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தேர்தல் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஆணையமும் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  இன்று செய்தியாளர்களிடம் பேசிய உமேஷ் சின்ஹா, ஆர்.கே.நகர்  இடைத்தேர் தலை மிகவும் நியாயமாக நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இடைத்தேர்தலில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், டோக்கன், மதுபானம் வழங்கப்படுவது குறித்து எந்த நேரத்தில் புகார் அளித்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதுபோல் வாக்காளர்களுக்குத் தொல்லை கொடுத்தாலும்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இந்த தேர்தலில் போலி வாக்காளர் வாக்களிக்க வாய்ப்பில்லை என்றும்,  வாக்குச்சாவடிகள், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்தும்  கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.