டெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ,  கார்கே  மற்றும் டி.ஆர்.பாலு,  கனிமொழி எம்.பி.  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 நாடாளுமன்றம்  குளிர்கால கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக    நாடாளுமன்றத்தின் மகர் துவார் பகுதியில் இண்டியா கூட்டணி எம்பிக்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

அப்போது,  பிஹாரைத் தொடர்ந்து 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆர் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வாக்குத் திருட்டில் ஈடுபடக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்களின் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இண்டியா கூட்டணி எம்பிக்களின் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பியும், கட்சி தலைவருமான கார்கே, “ஜனநாயகத்தைக் காப்பாற்ற தொடர்ந்து போராட்டம் நடத்துவேன்” என்றார். காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசும் போது,  “எஸ்ஐஆர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். வாக்களிக்கும் உரிமை ஆபத்தில் இருப்பதால், இந்த முக்கிய பிரச்சினையில் இருந்து அரசு விலகி ஓடக்கூடாது. பிஹாரில் 62 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போது 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் நடத்தப்படுகிறது.

எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வதால் எழுந்துள்ள கூடுதல் அழுத்தம் காரணமாக ஏராளமான பிஎல்ஓக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.” என வலியுறுத்தினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்பியுமான திக்விஜய் சிங், “நாங்கள் எப்போதும் எஸ்ஐஆர்-க்கு ஆதரவாகவே இருக்கிறோம். எஸ்ஐஆர் ஏற்கெனவே நடந்துள்ளது. அப்போது, 2 முதல் 4 மாதங்களுக்கு அது நடக்கும். அதோடு, அது ஒவ்வொரு குடிமகனின் வாக்குகளையும் பதிவு செய்வதற்கான ஒரு செயல்முறையாக இருந்தது. வாக்காளர்கள் எந்த படிவங்களையும் நிரப்பவில்லை.

பிஎல்ஓ வந்து கேட்பார், நாங்கள் தகவல் கொடுப்போம். எங்கள் வாக்கு சேர்க்கப்படும். ஆனால், இந்த எஸ்ஐஆர் என்பது படிவத்தை நிரப்பி, இந்திய குடிமகன் என்பதற்கான ஆதாரத்தை இணைக்கக் கோருகிறது. இது உண்மையில் எஸ்ஐஆர் அல்ல. இது சிஏஏ. எனவேதான் நாங்கள் இதை எதிர்க்கிறோம்.” என தெரிவித்தார்.