டில்லி,

லுக்அவுட் தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு செல்வதை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில்  மத்திய அரசு திட்டவட்டமாக கூறியதை தொடர்ந்து வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்துக்கு வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

இதன் காரணமாக அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம், வெளிநாடு தப்பிச் செல்ல  வாய்ப்பிருப்பதாகக் கூறி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் விடுத்தது. மேலும், அவர் வெளிநாட்டுக்கு செல்வதற்கு நீதிபதிகள் தடைவிதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், பிரிட்டனுக்கு செல்ல தம்மை அனுமதிக்கவேண்டும் என கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கார்த்தி சிதம்பரத்தை வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்க கூடாது மத்திய அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.