சென்னை:

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பைனான்சியர்  அன்புச்செழியனுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது உண்மையா என்று டிடிவி ஆதரவு தங்கத்தமிழ் செல்வன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்ட பைனான்சியர் அன்புச்செழியன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் வெளி நாட்டில் இருப்பதாகவும், வெளி மாநிலத்தில் தங்கி உள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாயின. இதையடுத்து,  அன்புச்செழியனை வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்க, லுக் அவுட் நோட்டீஸை காவல்துறையினர் விமான நிலையங்களுக்கும் அளித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், இன்று நடைபெற்ற அமைச்சர் செல்லூர் ராஜு இல்ல விழாவில் அன்பு செழியன் கலந்துகொண்டதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் உடன் தனி அறைக்கு சென்று ஆலோசனை நடத்தியதாகவும் செய்தி வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,  கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவாளரான தங்கத்தமிழ் செல்வன், தேடப்படும் குற்றவாளி அன்புச்செழியனுடம் முதல்வர் பேசியதாக வெளியான தகவல் அதிர்ச்சி தருகிறது என்றும், அவ்வாறு நடந்திருந்தால் அது கண்டனத்துக்குரியது என்றும்  கூறி உள்ளார்.