புதுடெல்லி: மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்தபிறகு, மாசுக் கட்டுப்பாட்டு சோதனைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லியில் மொத்தம் 938 மாசு கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன. இந்த மையங்களுக்கு மொத்தம் 1.28 லட்சம் வாகனங்கள் நீண்டவரிசையில் அணிவகுத்து நின்றதாய் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏனெனில், முன்பெல்லாம் மாசுக் கட்டுப்பாட்டு விதிமீறலுக்கான அபராதம் ரூ.1000 என்பதாக மட்டுமே இருந்தது. முதல் முறை பிடிபடும்போது ரூ.1000 கட்ட வேண்டும். பின்னர், அடுத்தடுத்த முறை பிடிபடுகையில் ரூ.2000 கட்ட வேண்டும் என்ற விதி இருந்தது.

ஆனால், புதிய சட்டத் திருத்தத்தின்படி இனிமேல் பிடிபட்டால் ரூ.10000 ஐ கறந்து விடுவார்கள். அந்த பயத்தின் காரணமாகவே மாசுக் கட்டுப்பாட்டு மையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நெருக்கடியால் சர்வர் பிரச்சினை உள்ளிட்ட பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.