காஷ்மீர் விவகாரம் : லண்டன் இந்தியத் தூதரகம் முன்பு பாகிஸ்தானியர் வன்முறை

Must read

ண்டன்

காஷ்மீர் விவகாரம் குறித்து லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம்  முன்பு பாகிஸ்தானியர்கள் வன்முறை ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.

விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீருக்கு அளித்த சிறப்பு  அந்தஸ்தை மத்திய அரசு சென்ற மாதம் 5 ஆம் தேதி ரத்து செய்தது. அத்துடன் மாநிலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாகவும் லடாக் பிரதேசம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டு வரப்பட்டது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையொட்டி காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தொடர்கிறது.

நேற்று பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு பாகிஸ்தானியர்கள் கூடி போராட்டம் நடத்தி உள்ளனர். சுமார் 10  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரிட்டன் வாழ் பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் விவகாரம் குறித்து கையில் காஷ்மீர் கொடியுடன் முதலில் பேரணியாகச் சென்றுள்ளனர். பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலரும் அவர்களுடன் இணைந்துள்ளனர்.

இந்தியத் தூதரகத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்த பாகிஸ்தானியர்கள் இந்திய அரசுக்கு எதிராகக் கோஷமிட்டுள்ளனர். இந்த போராட்டக்காரர்கள் திடீரென இந்தியத் தூதரகம் மீது வன்முறை தாக்குதல் நடத்தத் தொடங்கி உள்ளனர். அவர்களின் கல்லெறி தாக்குதலால் தூதரக அலுவலக  கண்ணாடிகள் உடைந்தன. அது மட்டுமின்றி முட்டை, காலி தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகளையும் பாகிஸ்தானியர்கள் வீசி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

பாகிஸ்தானியர்களின் இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ பதிவு, மற்றும் செய்திகளை இந்தியத் தூதரகம் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானியர்களின் இந்த தாக்குதல் மிகவும் கேவலமான செயல் என அந்த பதிவில் பலரும் கருத்து தெரிவ்த்துள்ளனர்.

இந்த பதிவுக்குப் பின்னூட்டம் அளித்துள்ள லண்டன்  நகர மேயர் சாதிக் கான் பாகிஸ்தானியர்களின் இந்த வன்முறைப் போராட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த வன்முறை போராட்டங்களை யாராலும் ஏற்ருக் கொள்ள முடியாது எனவும் இவ்வாறு அராஜகச் செயலில் ஈடுபட்டோர் மீது பிரிட்டன் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article