லண்டனில் இருந்து ரவி சுந்தரம்:
தமிழகத்தில் சமீபத்தில் இரண்டு பெண்கள் மிக மோசமான முறையில் கொல்லப்பட்டார்கள்.
இது மிகவும் கண்டிக்க வேண்டிய விஷயம்.
இதே சமயத்தில் இங்கிலாந்து லண்டனின் முக்கிய சதுக்கத்தில் ஒரு மனிதன் ஆறு பேரை கத்தியால் குத்தினான். அதில் ஒரு அமெரிக்க பெண் சுற்றுலா பயணி மரணமடைந்தார்.
இந்த செயலும் மிகவும் கண்டிக்கப் பட வேண்டிய விஷயமே.
இந்த இரண்டு நிகழ்விலும் நான் கண்ட வித்தியாசங்களை இங்கு முன் வைக்கிறேன்.
தமிழகத்தில் கொலை நடந்தவுடன் கொலையுண்டது பெண். கொலை செய்தது ஆண் என்றவுடன் இருவருக்குமான தொடர்புகள் ஆராயப்பட்டன.
காவல்துறை இது பற்றி எந்தவித செய்தி குறிப்பும் கொடுப்பதற்கு முன்பே நமது அதிதிவிர ஊடக நண்பர்கள் கொலை நடந்த இடம் சென்று அங்கு விசாரித்து கொலை செய்யப்பட்ட நபரின் சொந்தக்காரர்களிடம், பக்கத்து வீட்டுகாரர்களிடம் பேட்டி என்று முழுவிவரம் சேகரிப்பதாக சொல்லிக் கொண்டு சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக இதே சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஒலி ஒளி பரப்பி அந்த பெண்ணை மீண்டும் மீண்டும் கொன்றார்கள்.
அந்த சம்பத்தினால் கொலையுண்ட அந்த பெண்ணின் குடும்பம் எப்படி பரிதவிக்கிறது ? அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டாமா ? என்றெல்லாம் யோசிக்காமல் முகத்துக்கு நேராக மைக் கை நீட்டி அபத்தமான கேள்விகளை வைப்பது நம் வழக்கம்.
பரபரப்புக்காக அந்த செய்தியின் மீது தங்களின் கருத்தையும் உணர்வுகளையும் வார்த்தைகளில் ஏற்றி கொடுரமாக விவரித்தார்கள்: அல்லது எழுதினார்கள். அதற்கேப்ப படங்களும் ஒளிக்காட்சிகளும் காட்டப்பட்டது.
அடுத்து மேலும் பரபரப்புக்காக அல்லது வேறு சில காரணங்களுக்காக இப்போது செய்யத் தொடங்கியிருக்கும் உத்தி… மிகவும் மோசம். இறந்தவரின் ஜாதி, அல்லது மதம் என்ன… குற்றம்சாட்டப்பட்டவரின் இனம் மதம் என்ன என்பதின் அடிப்படையில் ஊகங்களை பரவ விடுவது.
இதை இவர்கள் நேரடியாக் சொல்ல தயங்கி இவர்களின் ஆஸ்தான கருத்து கந்தசாமிகளை சமுக ஆர்வலர் என்கிற போர்வையில் உள்ளே கொண்டு வந்து அவர்கள் மூலமாக சொல்ல வைக்கின்றனர்.
உடனே நம்ம வழக்கப்படி அவரவர் ஜாதி சங்க தலைவர்கள் முதல் தேசிய கட்சி உள்ளூர் தலைவர்கள் வரை வந்து கேமரா முன்பு தம் மொண்ணை கருத்துக்களை வைத்து சண்டையை தீவிரப்படுத்துவார்கள். மாநில அரசு, மத்திய அரசு முதல் ஐநா சபை வரை எல்லோரையும் குறை சொல்லி தமிழக சட்ட ஒழுங்கு எப்படி சீர் கெட்டு போச்சு என்று அங்கலாய்ப்பார்கள்.
இத்தனை கூத்துக்கும் இடையில் சம்பந்த பட்ட மாவட்ட காவல்துறை அதிகாரி மூக்கால் வாசி நேரம் இந்த குற்றம் சம்பந்த பட்ட அறிக்கையை நேரடியாக வந்து சொல்லவே மாட்டார். அதற்கான பயிற்சி இங்கு எந்த காவல் அதிகாரிக்கும் அளிக்கப்படுவதேயில்லை.
குற்றம்சாட்டப்பட்டவரின் வக்கீல் அல்லது அரசு வக்கீல் வந்து தங்கள் வீர தீர பராக்கிரமங்களை தொலைகாட்சியில் சொல்கிறார்கள். மிகவும் அபத்தமான அடிப்படையில் எப்படி இவர்கள் புது புது கதையை கிளப்பி ஜாமீன் வாங்க முயல்கிறார்கள் என்று விளம்பரம் தேட முயல்கிறார்கள் .
மிச்சம் மீதி திரைக்கதையை வழக்கப்படி நம் சமுக வலைத்தளங்கள் தொடர்கின்றன.
இந்த முறையில் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம். முடிவு என்னவோ… சந்தைக்கடை சண்டைதான்.
செய்தியின் வலியோ வீரியமோ போய் நீ பெரியவனா ? நான் பெரியவனா ? உன் ஜாதி/மதம் சிறந்ததா என் ஜாதி மதம் சிறந்ததா என்ற பட்டி மன்றம்தான் பொதுவெளியில் மிஞ்சும்.
அடுத்த பரபரப்பு செய்தி கிடைக்கும் வரை இப்படித்தான் நமக்கு பொழுது போகும்!
இங்கிலாந்தில் என்ன நடக்கும் ?
இங்கு ரஸ்ஸல் சதுக்கத்தில் ஒரு இளைஞன் கத்தியால் குத்த.. அமெரிக்க பெண் பயணி இறந்துவிட்டாரே.. அந்த நிகழ்வைத்தான் சொல்கிறேன்.
கொலை வெறி தாக்குதல் நடந்தவுடன் அங்கு செல்லும் ஊடகங்கள் உடன் அந்த செய்தியை வெறும் ஒரு மோசமான நிகழ்வாகவே விவரித்தார்கள்.
எப்படி நடந்தது என்பதை யூகத்தின் அடிப்படையில் சொல்வதை தவிர்த்தார்கள் .
செய்தியில் குருரத்தை சொல்லி பரபரப்பு தேடுதல் இங்கு தவிர்க்கப்படும். குபுகுபு என்று ரத்தம் கொட்டியது என்பதெல்லாம் கிடையவே கிடையாது. துடிக்க துடிக்க வெட்டினான் என்றெல்லாம் எழுதப்படவே மாட்டாது. பாதிக்கப்பட்டவரின் குடும்பம் தொலைகாட்சிக்கு பேட்டியளிக்காது. அக்குடும்பத்தின் தனிமை மதிக்கப்படும். செய்தி சொல்பவர் தன உணர்வுகளை படபடப்பை தன் குரலில் ஏற்றி சொல்ல மாட்டார். இதற்காகவே இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
உண்மையில் இறந்தது ஆணா பெண்ணா என்பதை கூட பல சமயங்களில் காவல்துறையின் அதிகார பூர்வமான செய்தி வெளியிட்டுக்கு பிறகே தெரியப்படுத்துவார்கள். One Person was seriously injured or One person was known to have been killed என்றே சொல்வார்கள்.
குற்றம் நடந்தவுடன் புலன் விசாரணை தொடங்கியவுடன் அந்த இடத்திலேயே காவல்துறை ஆய்வாளர் அந்த நிகழ்வைப் பற்றி ஒரு சிறு அறிக்கை அளித்தார். இதற்கு இங்கு சிறப்பு பயிற்சி அனைத்து அதிகாரிகளுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் பிடிபட்டால் நிச்சயம் அப்போதும் காவலரின் அறிக்கையே முன்னிலைபடுத்தப்படும். குற்றவாளியின் மதம் இனம் அடிப்படையில் ஊகங்கள் தவிர்க்கப்படும். தீவிரவாதமாக இருக்கலாமா இல்லையா என்பதை காவல்துறை உடனே வந்து தெளிவு படுத்திவிடும்.
சமிபத்திய கொலையில் சம்பந்த பட்டவர் ஒரு நார்வே குடியுரிமை பெற்ற சோமாலியவை சேர்ந்த இஸ்லாமியரான ஆண் என்று தெரிந்ததும் இதன் பின்னே தீவிர வாதம் இருக்குமோ என்று வெறும் 48 மணி நேரமே குழம்பினர். அதுவரை ஊடகங்களும் அமைதி காத்தன. அந்த மனிதன் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவன் என்று தெரிந்ததும் உடனே அதை அறிக்கையாக வெளியிட்டு தீவிரவாத பயத்தை போக்கினர். இது இன்றைய காலச்சூழலில் மிகவும் முக்கியம். வதந்திகளுக்கு இடமே அளிக்கவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த கொலையில் சம்பந்த பட்டவரின் பெயர் வெளியிட காவல்துறைக்கே அனுமதி உண்டு. வழக்கு விசாரணைக்கு செல்லும் வரை குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படம் 100 சதவிகிதம் வெளிவராது.
அதுவரை இந்த நிகழ்வை யாரும் பொதுவெளியில் விவாதிக்க மாட்டார்கள். இதில் யார் தவறு. யார் சரி. ஏன் செய்திருக்கலாம் ? அவரது நேக்கம் என்ன? என்றெல்லாம் எந்த கொம்பனும் வந்து தொலைகாட்சியிலோ அல்லது வா னொலியிலோ விவாதிக்க மாட்டார்கள்.
அப்படி ஒரு குற்றம் விவாதிக்கப்பட்டால் அதை இந்த ஊர் நீதி மன்றம் மிகவும் கடுமையான நீதி மன்ற அவமதிப்பாகவும், நீதியை திசை திருப்ப முயல்வதாகவும் எடுத்துக் கொண்டு சம்பந்த பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் சிறை தண்டனையும் கிடைக்க வழி செய்யப்படும்.
அனுமானங்களும், கற்பனைகளும் கட்டுரையாக கூட செய்திதாள்களில் கூட வெளியட மாட்டார்கள். எவ்வளவு பெரிய மனிதன் எழுதி கொடுத்தாலும் இதே நிலைதான்.
இருதரப்பு வக்கீல்களும் வழக்கு முடியும் வரை தொலை காட்சியிலோ பத்திரிக்கையிலோ நேரடியாகவோ மறை முகமாகவோ தங்கள் பக்க நியாயங்களை சொல்ல முயல மாட்டார்கள். அது நீதி விசாரணையை பாதிக்கும் என்பது விதி.
வழக்கு முடிந்து தீர்ப்பு வந்தவுடன் ஜெயித்த கட்சியின் வக்கீல் சம்பந்த பட்டவர்களுடன் வெளியே வந்து ஒரு அறிக்கையை ஜெயித்தவர்களின் சார்பாக படிப்பார்கள். முக்கால் வாசி சம்பந்த பட்டவரே எழுதி வைத்திருந்த அந்த அறிக்கையை படிக்க முயல்வார்கள்.
அவ்வளவுதான்.
எந்தகாலத்திலும் வக்கீல்கள் வழக்கை நீதி மன்றத்துக்கு வெளியே வழக்கின் சாரத்தையோ அல்லது நீதி மன்றத்தின் நடவடிக்கைகளையோ விவாதிக்க மறுப்பார்கள். இதுவும் ஒரு மரபே.
பொதுவெளியில் நடந்த விபத்து அல்லது தீவிரவாத செயல், அல்லது மிகப்பிரலமானவர் சம்பந்தப்பட்ட வழக்கு என்றால் மட்டுமே காவல் துறை அதிகாரிகள் வழக்கு முடிந்த பிறகு அறிக்கையளிப்பார்கள்.
இப்போது சொல்லுங்கள் …எது சரி ?
பரப்பரப்பாக செய்தி சொல்லி மக்களை யூகங்களின் அடிப்படையில் ஒரு கொதி நிலையிலேயே வைத்திருந்து பல்வேறு புரளிகளுக்கும், வதந்திகளுக்கும் வாய்ப்பளித்து ஒருவரின் மரணத்தில் பலபேர் பலனடைய முயல்வதா ?
அல்லது, உண்மைகளை மட்டுமே முன்னிறுத்தி, அதே சமயம் செய்திகளின் மீதான தீவிரம் குறையாமல், பாதிக்கப்பட்டவரின் மனது நோகாமல்
மரபுகளை பேணி மக்களை அதிகம் பயமுறுத்தாத வெறுப்பை வளர்க்காத முறை சரியா?