
சென்னை:
தமிழகத்தில் அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்திய பாராளுமன்றத்தில் ஏற்கனவே, மத்திய அளவில் லோக்பால், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு மூலம் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க முடியும். நாடு முழுவதும் 20 மாநிலங்களில், லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், தமிழகத்தில் இன்னும் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.
எனவே, தமிழகத்தில் லோக் ஆயுக்தா ஏற்படுத்தவும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுமீதான விசாரணை தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான, கூடுதல் அட்வகேட் ஜெனரல், இது குறித்து, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய, நான்கு வாரங்கள் அவகாசம் கோரினார்.
அரசின் கோரிக்கையை ஏற்று, நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூலை 10க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.
[youtube-feed feed=1]