டெல்லி:  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுமீது, காங்கிரஸ் மற்றும்  பிஆர்எஸ் கட்சி  தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் இன்று 5வது நாளாக மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும், பிரதமர் மோடி பதில் அளிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சி கள் நாடாளுமன்ற இரு அவைகளையும்  முடக்கி வருகின்றன. இதற்கிடையில்,    நாடாளுமன்றத்தில், இன்று , காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய், பாரத ராஷ்டீரிய சமிதி கட்சியின் நாகேஸ்வர ராவ்  ஆகியோர் மோடி அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். மணிப்பூர் வன்கொடுமை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமரை பேச வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பெரும்பான்மையுடன் உள்ள  மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தன.

இநத் நிலையில்,   எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் அவைத்தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசித்து விவாதம் எப்போது என்பது தொடர்பான விவரத்தை தெரிவிப்பேன் என்று கூறினார்.