லக்னோ:

லோக்சபா தேர்தலில் உ.பி. மாநிலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்டி பிஎஸ்பி, எஸ்.பி. கூட்டணி  படுதோல்வி அடைந்த நிலையில், நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக மாயாவதி அறிவித்து உள்ளார். இதன் காரணமாக இரு கட்சிகளுக்கு இடையே உள்ள கூட்டணி முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தலின்போது, தேசிய கட்சிகளான காங்கரஸ், பாரதியஜனதா கட்சிக்கு மாற்றாக, உ.பி. மாநிலத்தில் கூட்டணி சேர்ந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரத்திற்குள் தங்களது கூட்டணியை முறித்துக்கொள்ள முன்வந்துள்ளன.

உ.பி.யில் காலியாக உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தனித்து போட்டியிடப்போவதாக மாயாவதி தெரிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் எலியும் பூனையுமாக பல ஆண்டு காலமாக திகழ்ந்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும், மத்தியில் ஆட்சியை பிடித்துவிடலாம் என கனவோடு, மாநிலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.

அங்கு மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 38 இடங்களில்  பகுஜன் சமாஜ் கட்சியும், 37 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும் போட்டியிட்டன.  அத்துடன்  அஜீத்சிங்கின் ஆர்.எல்.டி .கட்சிக்கு 3  தொகுதி கள் ஒதுக்கப்பட்ட நிலையில், சோனியாவின் ரேபரேலி தொகுதியிலும், ராகுலின் அமேதி தொகுதியிலும் போட்டியிட மாட்டோம் என்று அறிவித்திருந்தனர்.

கடந்த தேர்தலின்போது, இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று முறைத்துக்கொண்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தது வியப்பை ஏற்படுத்தியது.   நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு வியூங்களை வகுத்து களத்தில் குதித்தனர். பல ஆண்டுகளுக்கு பிறகு தங்களது விரோதங்களை மறந்துவிட்டு  முலாயம் சிங் யாதவும், மாயாவதியும் ஒரே மேடையில் ஏறி தேர்தல் பிரசாரத்தின்போது , கட்சியினருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர். அத்துடன் உ.பி. மாநிலம் கன்னோஜ் தொகுதியில் போட்டியிடும் டிம்பிளை அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்த மாயாவதி டிம்பிளை தனது மருமகளாக பார்ப்பதாக புகழ்ந்து தள்ளினார்.

இந்த நிலையில் லோக்சபா தேர்தல் முடிவுகள்  பிஎஸ்பி, சமாஜ்வாதி கூட்டணிக்கு பயங்கரமான அடியை கொடுத்தது. அவர்களின் கனவில் மண் விழுந்தது. உ.பி.யில் நடைபெற்ற 80 தொகுதி களுக்கான லோக்சபா தேர்தலில் பாஜக 62 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. 38 இடங் களில் போட்டியிட்ட மாயாவதி கட்சி 10 இடங்களையும், 37 இடங்களில் போட்டியிட்ட அகிலேஷ் கட்சி 5 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இதன் காரணமாக பிஎஸ்பி, எஸ்பி கூட்டணி மக்களிடையே எடுபடாத நிலை தெளிவானது.

இந்த நிலையில், டில்லி சென்றுள்ள மாயாவதி அங்கு தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.  அப்போது,  தேர்தல் தோல்வி குறித்து கட்சியினரிடையே பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தேர்தலில் நாம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்று தெரிவித்த வர், முலாயம் சிங் யாதவ் கட்சியினரின் (யாதவ சமுதாயத்தினர்) வாக்குகள் இடம்மாறி சென்று விட்டதால் தோல்வி அடைந்ததாக தெரிவித்து உள்ளார்.

மேலும், விரைவில் நடைபெற உள்ள 11 சட்டமன்ற இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட இருப்பபதாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக  மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.